தீரன் சின்னமலைக்கு முதல்வர் விஜய் மரியாதை.. உதயநிதியும் புகழஞ்சலி..!

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 222ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டித் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முதலமைச்சர் விஜய் விடுத்துள்ள செய்தியில், கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விடுத்துள்ள செய்தியில், திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து பிரிட்டிஷாருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய விடுதலைப் போராளி தீரன் சின்னமலை எனக் குறிப்பிட்டுள்ளார். நேரடியாக எதிர்கொள்ள இயலாத எதிரிகள் சூழ்ச்சியால் அவரைத் தூக்கிலிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், ‘சென்னிமலைக்கும் – சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை’ என்று வீரமுழக்கமிட்ட தீரன் சின்னமலையின் தியாகத்தையும் – வீரத்தையும் போற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ள செய்தியில், உலகமே ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய நிலையில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர்களை அலற வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரர் தீரன் சின்னமலை எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டைக் காப்பதில் தீரன் சின்னமலையின் வீரத்தையும், தேசப்பற்றையும் இளைஞர்கள் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.அமமுக பொதுச்செயலாளர் தினகரன் விடுத்துள்ள செய்தியில், தனது வீரத்தாலும் அசாத்தியமான போர்த் திறமையாலும் ஆங்கிலேயப் படைகளை விரட்டியடித்த பெருமைமிக்க மாவீரர் தீரன் சின்னமலை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *