
லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டிநடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இரண்டாவது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகின்றது.
இதன் கடைசி லீக் போட்டியில் இந்திய அணியும் மேற்கிந்தியத் தீவு அணியும் விளையாடின. இதில் மேற்கிந்தியத் தீவு அணி முதலில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13 புள்ளி 2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடம்பிடித்து அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
இந்தத் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுத்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் விளையாடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


