Nagercoil Prison Death : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசு..!

Advertisements

நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி கைதியான சபரிவர்மன் உயிரிழந்த வழக்கைச் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றித் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் அருகே ஈத்தங்காடு ஊரைச் சேர்ந்த மாற்று திறனாளியான சபரிவர்மன் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததாகக் கடந்த 9ஆம் தேதி தென்தாமரைகுளம் காவல்துறையினர் கைது செய்து, நாகர்கோவிலில் மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக அடைத்தனர். கடந்த 13 ஆம்தேதி வார்டன் மற்றும் சிறை கைதிகள் தாக்கியதில் சபரி வர்மன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து, சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் ஆகிய மூன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், வெரியபெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 கைதிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்குத் தொடர்பாக தடவியல் நிபுணர்கள் சிறையில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் சபரிவர்மனைக் காவல்துறையினர் தாக்கிய அறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.
தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களைக் கொண்டு கைது செய்யப்பட்டுள்ள சிறை கைதிகள் அரவிந்த், அஜய், ஜெகன் ஆகிய 3 கைதிகளையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சபரிவர்மன் வழக்குச் சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *