Russia : கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 8 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம்.!

ரஷ்யாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில்  எட்டுப் புள்ளி எட்டு ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பசிபிக் பெருங்கடல் கரையோர நாடுகளில் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.பசிபிக் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் ரஷ்யாவின் காம்சட்கா தீபகற்பத்தின் கரையோரத்தில் உள்ளூர் நேரப்படி பகல் 11.25 மணிக்கு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் எட்டுப் புள்ளி எட்டாகப் பதிவாகியுள்ளது.வலுவான இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடல் கரையோர நாடுகளில் பெரும் சுனாமி அலைகளை உருவாக்கும் என்பதால் ரஷ்யாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள், ஜப்பான், அமெரிக்காவின் ஹவாய்த் தீவுகள், அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகள், பிலிப்பைன்ஸ், சீனா, இந்தோனேசியா, நியூசிலாந்து ஆகியவற்றுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் முதலில் ரஷ்யாவின் சாகாலின் மண்டலத்தில் துறைமுக நகரான செவரோ குரில்ஸ்க்கில் மூன்று சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதனால் துறைமுக நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் கடல்வெள்ளத்தில் மூழ்கின. முன்னறிவிப்புக் கொடுத்ததால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறிச் சென்றுவிட்டதாகக் குரில் தீவுகளின் மேயர் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.மூன்று மீட்டர் உயரத்துக்குக் கடல் அலைகள் எழும் என்கிற சுனாமி எச்சரிக்கையால் ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள மக்கள் முதல் தளத்துக்கும் மொட்டை மாடிக்கும் சென்று விட்டனர். பசிபிக் கடல் தீவான ஹவாயில் சுனாமி அலைகள் தாண்டிச் செல்லும் வரை துறைமுகத்தில் உள்ள கப்பல்களையெல்லாம் நடுக்கடலுக்குக் கொண்டுசெல்லும்படி உத்தரவிடப்பட்டது.

ஹவாயின் ஓகூ என்னுமிடத்தில் அலைகள் வழக்கத்தைவிட நாலடி உயரத்துக்கு எழும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் புகுசிமா அணுமின் நிலையத்தில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் 2011ஆம் ஆண்டு நிலநடுக்கத்தாலும் சுனாமிப் பேரலையாலும் அணுக் கதிர்வீச்சு ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *