
வால்பாறையில் ஆறு வீடுகளின் பூட்டுக்களை உடைத்த மர்ம நபர்களை, சி.சி.டி.வி. காட்சிகளின் மூலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை-காமராஜர் நகரில், மக்கள் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர்கள், அங்கு குடியிருக்கும் பொன்னுத்தாய், தங்கவேல்,மணி, உண்ணி, தேவி, மல்லிகா ஆகிய ஆறு பேர்களின் வீடுகளின் பூட்டுக்களை உடைத்துவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
இது குறித்து காமராஜர் நகர் பகுதி மக்கள் வால்பாறை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற, காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, ஆறு வீடுகளின் பூட்டை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், சிலர் வெளியூர் சென்றிருப்பதால், அவர்கள் திரும்பி வந்த பிறகே, நகை, பணம் திருடப்பட்டது தெரிவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு வீடுகளில் திருடிய நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ள நிலையில், ஆறு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



