வித்யா, விஷாலுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகை -CM விஜய் அறிவிப்பு.!

தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ், விஷால் டி.கே. ஆகியோருக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் தலா 50 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பந்தயப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் 4 நபர் அடங்கிய இந்தக் கலப்பு தொடர் ஓட்டக் குழுவில், 2 வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு மட்டுமில்லாமல், தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகும் என்று குறிப்பிட்டுள்ளார். தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா 50 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இவர்களது வெற்றி, விளையாட்டில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள இவர்களின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைத்திட வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *