சிவகார்த்திகேயனின் SK27 தொடக்கம் – இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உற்சாக பதிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அவரது புதிய படமான SK27 தொடர்பான முக்கிய அப்டேட்டை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து, தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

‘அமரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதனிடையே, கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தை ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பூஜை நிகழ்ச்சியும் நடைபெற்று முடிந்துள்ளது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் கவனம் பெற்றவர் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். அந்த திரைப்படத்திற்காக அவர் தேசிய விருதையும் பெற்றுள்ளார். இதனால், சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே அதிகரித்தது.

இந்த புதிய திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது இப்படம் SK27 என குறிப்பிடப்பட்டு வரும் நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழு தொடர்பான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “SK27 இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல, இன்று தொடங்கும் ஒரு கனவு” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் அண்ணனுடன் SK27 படத்தின் மூலம் தனது புதிய அத்தியாயத்தை தொடங்குவது பெரும் பாக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்த புதிய பயணத்திற்கு அனைவரின் ஆசிகளும் ஆதரவும் தேவை எனவும் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இணையும் இந்த புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் கதை, கதாபாத்திரங்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட அடுத்தடுத்த தகவல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *