IND vs ENG 3rd Test: ஜெய்ஸ்வால் அதிரடி சதம்.. வலுவான நிலையில் இந்தியா!

Advertisements

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

ராஜ்கோட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிச் சதமடித்து அசத்திய பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ரூட் 18 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதன்பின் பென் டக்கெட், ஸ்டோக்ஸ் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர். இதில் பென் டக்கெட் 153 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 41 ரன்களிலும் வெளியேறினர்.பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகள், குல்தீப் யாதவ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, முதல் இன்னிங்சின் ஹீரோ ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் பின் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளனர். கில் நிதானமாக விளையாட மறுமுனையில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடிச் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

தற்போது வரை இந்திய அணி 42 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 172 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி முன்னிலையை வலுப்படுத்தி வலுவான நிலையில் உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *