ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி பதக்கம் – ஜனாதிபதி முர்மு வாழ்த்து!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் சுருச்சி இந்தர் சிங் மற்றும் கமல்ஜீத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதேபோல், ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவிலும் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று கொடுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜனாதிபதி முர்மு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற கமல்ஜீத் மற்றும் சுருச்சி இந்தர் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர்களின் வெற்றி துல்லியம் மற்றும் சிறந்த கூட்டாண்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும், 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்த அணியினருக்கும் ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த மற்றொரு எக்ஸ் பதிவில், இந்திய வீரர்களின் பாராட்டத்தக்க செயல்பாடும், சிறந்த கூட்டு முயற்சியும் துப்பாக்கி சுடுதல் மைதானத்தில் நாட்டுக்கு மேலும் ஒரு பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, இந்திய அணியினர் இதேபோல் வெற்றிகளை குவிக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி முர்மு, ஆசிய விளையாட்டு போட்டியில் நாட்டிற்கு பதக்கங்களை வென்று வரும் வீரர்களின் சாதனைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *