
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜயலட்சுமி அளித்த புகாரின் மீது போலீசார் பரபரப்பாக விசாரணை நடத்தி வருவதால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளித்த பிறகு விஜயலட்சுமி அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் அதன் மீது எந்த தாக்கமும் ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் சீமான் மீது விஜயலட்சுமி அளித்து உள்ள புதிய புகார் பூதாகரமாகி இருக்கிறது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதன் பேரில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தி விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்தார். இதை தொடர்ந்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஜய லட்சுமி மாஜிஸ்தி ரேட்டு முன்னிலையிலும் வாக்கு மூலம் அளித்தார். இப்படி சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் போலீசார் கோர்ட்டு மற்றும் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள். விஜயலட்சுமியின் வாக்குமூலத்தை தொடர்ந்து சீமான் மீது எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

