
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், லட்சிய ஜனநாயகக் கட்சி ஓரிடத்திலும் வென்றுள்ளன. சுயேச்சை மற்றும் பிற உறுப்பினர்கள் 5 பேரும் வெற்றிபெற்றுத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளனர்.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அப்போது ரங்கசாமி முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். அவருக்குத் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் பதவியேற்பு உறுதிமொழியும் இரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.
பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயமும், என்ஆர் காங்கிரசைச் சேர்ந்த ஏனாம் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணராவும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்குப் பதவியேற்பு உறுதிமொழியும், இரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைக்கப்பட்டது.
இந்த விழாவில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் கலந்துகொண்டார்.



