
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில், கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், சேலத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
இதற்கு அனுமதி கோரி அக்கட்சி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் எதற்காக அனுமதி மறுக்கப்பட்டது என விளக்கம் அளித்து அக்கட்சி நிர்வாகிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் விஜய் பரப்புரைக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள டிசம்பர் நான்காம் தேதி அன்று காவல்துறையினர் அதிகளவில் வெளி மாவட்ட பாதுகாப்பு படைக்கு செல்வதால் தங்களின் கட்சி நிகழ்ச்சிக்கு தேவையான அளவில் காவலர்களை நியமிக்க இயலாது, விஜய் மக்களை சந்திக்கும் இடத்தில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள் என்ற விவரம் மனுவில் தெரிவிக்கவில்லை.
இதில் சேலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து எவ்வளவு பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்; எந்தெந்த மாவட்டத்தில் இருந்து எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்கிற விவரம் இல்லை என்பதால் தங்களின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது.



