
தமிழக காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் முதலமைச்சர் பதக்கங்களை வழங்கும் விழா, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த 665 காவல்துறை அதிகாரிகளுக்கான பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
ஸ்டேடியத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறையினர் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) மகேஷ் குமார் அகர்வால் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இவ்விழாவில் ஐ.பி.எஸ். அதிகாரிகள், காவல்துறையினர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தடய அறிவியல் துறைகளைச் சேர்ந்த சிறந்த பணியாளர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களுடன், ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சக பதக்கங்கள் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




