
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக மாநில நீர்வளத்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177 டிஎம்சி தண்ணீரை விட, கடந்த காலங்களில் கூடுதலாக 400 டிஎம்சி தண்ணீருக்கும் மேலாகவே நாம் வழங்கியுள்ளதாகவும், தற்போது திறந்துவிடப்பட்ட தண்ணீரும் கூட முறையாகப் பயன்படுத்தப்படாமல் கடலில் தான் கலப்பதாகவும் தெரிவித்தார்.
கர்நாடக அணைகளுக்கு நொடிக்கு 25,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் சூழலிலும், மாநிலத்தில் போதிய நீர் இருப்பு இல்லை என்று விளக்கியும், காவிரி மேலாண்மை ஆணையம் நாள்தோறும் 3,500 கன அடி நீரைத் திறக்க உத்தரவிட்டிருப்பது தற்போதைய கடுமையான வறட்சிச் சூழ்நிலையில் மிகுந்த வேதனையளிப்பதாகக் கூறிய அவர், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்று ஆணையத்திடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும், இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைச் சேமிக்க மேகதாது அணை கட்டுவது மட்டுமே சரியான தீர்வாகும் எனக் குறிப்பிட்ட டி.கே.சிவக்குமார், இந்த அணை கட்டப்பட்டால் கர்நாடகாவைக் காட்டிலும் தமிழ்நாட்டிற்கே அதிகளவு நன்மைகள் கிடைக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.



