
டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 2021 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் புதிய வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் ஐ.ஏ.எஸ் அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அரசு வேலை மோசடி மற்றும் பல்வேறு வழக்குகளைச் சந்தித்து வரும் செந்தில் பாலாஜி, இந்த டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான முகாந்திரம் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழைய வழக்குகள் மீண்டும் கையில் எடுக்கப்படுவதாகவும், அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் வாதிடப்பட்டது. மறுபுறம், தமிழக அரசு தரப்பில் ரூ.100 கோடி ஊழலுக்கான முகாந்திரம் இருப்பதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், செந்தில் பாலாஜி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அவரை கைது செய்யவும் தடை விதித்த நீதிபதிகள், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் மற்றும் சாட்சிகளைக் கலைக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்ததுடன், இவற்றை மீறினால் முன்ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.



