திருமணங்களை புதுமண தம்பதிகளே இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

Advertisements

சென்னை:

புதிதாகத் திருமணம் செய்யும் தம்பதிகள், திருமணத்தை ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தப் புதிய திட்டம் துவங்க என்ன காரணம்? இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன தெரியுமா?

கடந்த 2009-ல் தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி, பத்திரப்பதிவு அலுவலகங்களிலேயே திருமணங்களைச் செய்து கொள்ளலாம். இந்தச் சட்டத்தின் கீழ், திருமணங்களைப் பதிவும் செய்து கொள்ளலாம்.

திருமண சட்டம்:

அதாவது, திருமணம் முடிந்த தம்பதிகள் 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் தங்கள் திருமணத்தைப் பதிவுசெய்ய வேண்டும். திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் அரசின் திருமண உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. 150 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்கள் பின் எப்போதுமே தங்கள் திருமணத்தைப் பதிவுசெய்ய இயலாது.

திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்கவும் இந்தச் சட்டம் வழிவகுத்துள்ளது. ஆனால், திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே இத்தகைய திருமணத்தைப் பதிவு செய்ய முடியும்.

சட்டதிருத்தம்:

எனவே, கடந்த 2020ல் இந்தச் சட்டத்தில் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதன்படி, மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்திலும் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம் என்பதே அந்தத் திருத்தம்.

ஆனாலும்கூட, இதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. மிகக் குறைவான திருமணங்களே பதிவு செய்யப்பட்டன. அதாவது, பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள், காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்கிறார்களாம்.

தமிழக அரசு:

இந்த அளவுக்குக் குறைவான திருமணங்கள் பதிவாவதற்கு என்ன காரணம் என்பதை தமிழக அரசு ஆய்வு செய்தது. அப்போதுதான் பதிவுத்துறையில் பெறும் சான்றிதழில் சிக்கல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, திருமண பதிவுக்கு ரூ.200 கட்டணமாக உள்ள நிலையில், ரூ.10 ஆயிரம் வரை பொதுமக்களிடம் லஞ்சமாகக் கேட்கிறார்களாம். வெறும் 200 ரூபாய்க்கு ரூ.10000 செலுத்த முடியாமல்தான், பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது அரசுக்குத் தெரியவந்து.

அதனால்தான், இந்த முறைகேடுகளுக்கெல்லாம் முற்றிப்புள்ளி வைக்கத் தமிழக அரசு இப்போது முடிவு செய்துள்ளது… அதன்படி, பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் திருமண பதிவுகளைப் பதிவு செய்யும் நடைமுறையைக் கொண்டு வரப் போகிறதாம்.

இந்தப் புதிய முறைப்படி, தம்பதிகள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரத் தேவையில்லை. பத்திர எழுத்தர்கள் மூலமாக அல்லாமல் தாங்களே நேரடியாக வீட்டிலிருந்து பதிவு செய்யலாம். இதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி விடலாம்.

புதிய வழிவகை:

திருமணத்திற்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், உடனடியாகச் சான்றிதழும் வழங்கப்பட்டுவிடும். இந்தத் திட்டம் முதலில் தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்குப் பொருந்தும் என்றும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்புத் திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

பத்திரப் பதிவுத்துறையில் தற்போதுள்ள ஸ்டார்-2 சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்டு, விரைவில் ஸ்டார்-3 கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வரும்நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளன. இந்தப் புதிய சாப்ட்வேரில்தான் இனிவரும் திருமண பதிவுகளைப் பொதுமக்களே மேற்கொள்ளப் போகிறார்களாம்.

எதிர்பார்ப்பு:

அந்தவகையில், இந்த ஆன்லைன் திருமணப்பதிவு வதியானது, மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்தப் பதிவுகள்மூலம் மோசடி திருமணங்கள் தடுக்கப்படும் என்றும், சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைப்படியும் முறையாகத் திருமணங்கள் பதிவு செய்யப்படும் என்றும் தமிழக அரசு நம்புகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *