
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு குறு மற்றும் சிறு விவசாயிகள் ரூ. 75,000 வரை பெற்ற கடன் மட்டுமே முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாடகத்தனமான அறிவிப்பைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் த.வெ.க. கூட்டணி அரசை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்த மறுப்பதுடன், தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்குப் பெங்களூரு வரும்போது அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று அணைகளைப் பார்வையிட வைப்பேன் என்று கர்நாடக முதலமைச்சர் கூறியுள்ள விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழக முதலமைச்சர் பெங்களூரு செல்வதாகச் செய்திகள் வெளியானபோதே, அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனையைப் பெற்று சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக இருக்கும் சூழலில், முதலமைச்சரின் பெங்களூரு பயணம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மேலும், மேகதாது விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் அளித்த பதில் மற்றும் கர்நாடக முதலமைச்சரின் நிலைப்பாடு குறித்து எவ்வித கருத்துகளையும் தெரிவிக்காமல் மவுனம் காக்கும் தமிழக முதலமைச்சருக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தமிழக விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்சினையான காவிரி மற்றும் மேகதாது விவகாரங்கள் குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.




