தமிழகத்தில் ‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்கு 5 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, 2026-27-ம் நிதியாண்டில் 70,000 வீடுகளைக் கட்டுவதற்காக ‘வெற்றி வீடு திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பயனாளிகள் குறைந்தபட்சம் 360 சதுர அடி முதல் 500 சதுர அடி வரையிலான பரப்பளவில் சமையலறையுடன் கூடிய கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம். குடிசை வீடுகள், மண் சுவர்கள் மற்றும் உறுதியற்ற கூரைகளைக் கொண்ட வீடுகளில் வசிப்போருக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும். முதற்கட்ட 70,000 வீடுகளுக்கான பயனாளிகள், ஊரக வளர்ச்சித் துறையிடம் ஏற்கெனவே உள்ள வீடற்றோர் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதேவேளையில், புதிய பயனாளிகளைத் தேர்வு செய்ய மொபைல் செயலி மூலம் வீடு வீடாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் அரசு இணையதளங்களில் பட்டியல் வெளியிடப்படும். வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருள்கள் பயனாளிகளுக்கு இரு கட்டங்களாக வழங்கப்படும். கூடுதல் நிதி தேவைப்படுவோர் தமிழ்நாட்டின் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ரூ.50,000 வரை 6 சதவீத வட்டியில் கடன் பெறலாம். மேலும், வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறும்போது, அதற்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியத்தை 15 ஆண்டுகள் வரை அரசே வழங்கும்.
இத்திட்டத்தின் கீழ் கழிப்பறை இல்லாத பயனாளிகளுக்குத் தூய்மை பாரத இயக்கம் மூலம் ரூ.12,000 செலவில் கழிப்பறை கட்டப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒதுக்கப்படும் வீடுகளில் 5 சதவீதம் மாவட்ட ஆட்சியரின் விருப்ப ஒதுக்கீடாக இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விடுபட்ட தகுதியுள்ள நபர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3,500 கோடியில், மாநில அரசின் நிதியாக ரூ.2,600 கோடியும், கிராம ஊராட்சிகளின் நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.900 கோடியும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வீடுகள் தரமாகவும், நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



