திருச்சி கிழக்கில் களமிறங்கப்போவது யார்.? விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!

திருச்சி கிழக்கு தொகுதி இப்போது தவெகவின் ஹாட் சீட்டாக மாறியிருக்கிறது. விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், அடுத்ததாக இங்கு களமிறங்கப்போகும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெள்ளித்திரையில் பிரபலமான ஒரு முகமா? அல்லது கட்சியின் முக்கிய அரசியல் நகர்வுகளை வகுக்கும் திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரு ஆளுமையா? இரு தரப்பிலும் பெயர்கள் அடிபடுவதால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் அந்த இரண்டு முக்கியப் புள்ளிகளில் ஒருவருக்குத்தான் திருச்சி கிழக்கு ஒதுக்கப்படுமா? யார் அந்த இருவர்? என்பதை விரிவாகப் பார்க்கலாம்..!

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மற்ற நான்கு தொகுதிகளிலும் அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வந்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், திருச்சி கிழக்கில் மட்டும் கணக்கு வேறு. கட்சி தொடங்கிய காலம் முதலே விஜய்க்குப் பக்கபலமாக இருக்கும் நிர்வாகிகளுக்கும், கட்சியின் அடுத்தகட்ட முகமாக உருவெடுத்துள்ள முக்கிய நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டிய சூழல் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யே போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி என்பதால், திருச்சி கிழக்கு இப்போது சாதாரண தொகுதி அல்ல… தவெகவின் விஐபி தொகுதி.  இங்கே யாரை வேட்பாளராகக் களமிறக்கப் போகிறார் விஜய்?

கட்சியின் விசுவாசிக்கா, செல்வாக்கு மிக்க விஐபிக்கா? வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே தவெகவுக்குள் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியைக் கைப்பற்ற தவெகவுக்குள் இப்போதே கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, குப. கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் இந்தத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டால், கட்சியின் தொடக்ககால நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி உருவாகவும் வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை திமுகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. அன்பில் மகேஷ், கே.என். நேரு ஆகிய இருவரையும் குறிவைத்து தவெக அரசியல் காய்களை நகர்த்தி வருவதாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், இவர்கள் இருவரும்தான் திமுகவின் தேர்தல் பணிகளை முன்னின்று கவனிக்க வேண்டியிருக்கும்.
ஆனால், இவர்களையே அரசியல் ரீதியாகக் குறிவைக்கும் வகையில் தவெக வியூகம் அமைப்பதாகக் கூறப்படுவது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை திருச்சி கிழக்கில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினே களமிறங்கினால், தேர்தல் களம் முற்றிலும் வேறொரு பரிமாணத்தை எட்டலாம். இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் தவெக முன்கூட்டியே அரசியல் காய்களை நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெறுவதை தவெக தனது கவுரவப் பிரச்சினையாகவே கருதுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, விஜய் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அங்கு வெற்றிக்கு எந்தவிதமான முட்டுக்கட்டையும் வந்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

இதனால், தவெகவின் அரசியல் வியூகங்களை வகுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஜான் ஆரோக்கியசாமியே திருச்சி கிழக்கில் வேட்பாளராகக் களமிறக்கப்படலாம் என்ற கணிப்பும் நிலவுகிறது.ஆனால், கோவையில் நடிகை திரிஷா நடத்திய ரோடு ஷோவும், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திரிஷாவை தவெக அரசியலுக்கு மெதுவாக அறிமுகப்படுத்துகிறதா? அதாவது, அவரைச் சாஃப்ட் லான்ச் செய்கிறதா? என்ற கேள்விகளும் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளன.

இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் ஜான் ஆரோக்கியசாமியா அல்லது திரிஷாவா என்ற எதிர்பார்ப்பைத் தாண்டி, விஜய்க்கு அடுத்தபடியாகக் கட்சியில் முக்கியத்துவம் பெற்ற ஒரு முகத்தையே வேட்பாளராகக் களமிறக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இறுதியில் விஜய் யாருக்கு வாய்ப்பு வழங்கப்போகிறார் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *