“ரூ. 15 கோடி வேணுமா? தவெக அரசுக்கு எதிரா ஓட்டு போடுங்க!” – சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு வந்த ஒரு போன் கால், இன்று மதுரை மாநகரையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
மதுரை அரசியலின் ‘பவர்ஃபுல்’ மனிதர்களில் ஒருவரான அதிமுக நிர்வாகி பி.எம். மன்னன், தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவின் உதவியாளரை தொடர்புகொண்டு, சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தவெக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தால் ரூ. 15 கோடி வரை தருவதாகப் பேரம் பேசியதாகப் பகீர் குற்றச்சாட்டு வெடித்துள்ளது.
வெறும் குற்றச்சாட்டோடு நிற்காமல், அந்தத் தொலைபேசி உரையாடலின் ஆடியோ ஆதாரங்களோடு எம்.எல்.ஏ முஸ்தபா நேரடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்க.. அடுத்த சில மணி நேரங்களிலேயே களத்தில் இறங்கியது மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்..
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிரடியாகப் பாய்ந்த வழக்கும், அதைத் தொடர்ந்து நடந்த பி.எம். மன்னனின் கைதும் மதுரை அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. யார் இந்த பி.எம். மன்னன்? அழகிரியின் நிழலாக இருந்து அதிமுகவின் முக்கிய முகமாக மாறிய இவரது பின்னணி என்ன? ரூ. 15 கோடி குதிரை பேரத்தின் பின்னணியில் நடந்தது என்ன? முழுமையான விவரங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்…
முதலில் யார் இந்த பி.எம். மன்னன் என்று பார்க்கலாம்…!
மதுரை மாநகர அரசியலில் ஒரு முக்கிய முகமாக விளங்குபவர் தான் இந்த பி.எம். மன்னன். இவர் மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயராகப் பதவி வகித்த அனுபவம் கொண்டவர். தென் தமிழக அரசியலில், குறிப்பாக மதுரையில் திமுக வலுவாக இருந்த காலத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான மு.க. அழகிரியின் மிக நெருங்கிய ஆதரவாளராகவும், அவரது நிழலாகவும் வலம் வந்தவர்.
அழகிரியின் அரசியல் செல்வாக்கு மதுரைப் பகுதியில் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து, பி.எம். மன்னன் திமுகவிலிருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இணைந்த பிறகும் மதுரைப் பகுதியில் தீவிர கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகச் செயல்பட்டு வந்தார்.
சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் அரசிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களைக் கவரும் வகையில் மிகப்பெரிய அளவில் ‘குதிரை பேரம்’ நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் வெடித்தன. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது தவெக ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பதற்காக எம்.எல்.ஏ-க்களிடம் ரூ. 15 கோடி முதல் ரூ. 30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
வாக்கெடுப்புக்கு முன்பாக முன்பணமாக ரூ. 15 கோடியும், வாக்கெடுப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு மீதமுள்ள தொகையும் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.இந்த விவகாரத்தில், மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா அவர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி புகார் அளித்தார். அதிமுக நிர்வாகி பி.எம். மன்னன் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தவெக ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனக் கூறி ரூ. 15 கோடி வரை பேரம் பேசியதாக முஸ்தபா குற்றம்சாட்டினார்.
வெறும் வாய்மொழி குற்றச்சாட்டாக மட்டுமில்லாமல், பி.எம். மன்னனுடன் பேசிய தொலைபேசி உரையாடல் பதிவு மற்றும் அது தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து, மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் முஸ்தபா முறைப்படி புகார் மனுவைச் சமர்ப்பித்தார்.எம்.எல்.ஏ முஸ்தபா அளித்த புகார் மற்றும் அவர் சமர்ப்பித்த ஆடியோ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பி.எம். மன்னன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்தனர்.அதன் தொடர்ச்சியாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் பி.எம். மன்னனை அதிரடியாகக் கைது செய்தனர். இந்தத் தகவல் பரவியதைத் தொடர்ந்து, மதுரை மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் முன்பாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர்.
இந்த அதிரடி கைது நடவடிக்கையும், கோடிகளில் புரண்ட குதிரை பேரப் புகாரும் மதுரை அரசியலில் தற்போது ஒரு பெரும் தீப்பற்ற வைத்துள்ளது. காவல்துறை தரப்பில் தீவிர விசாரணை நடந்து வருவதால், அடுத்தடுத்து யார் யார் சிக்குவார்கள்? இந்த விவகாரம் தமிழக அரசியலில் என்ன மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தப் போகிறது? என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்..!

