
வட மாநிலங்களில் கனமழை பெய்துவரும் நிலையில் கங்கையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கரையோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இமாச்சலம், உத்தரக்கண்ட், பஞ்சாப், அரியானா, தில்லி, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இதனால் கங்கையிலும் அதன் துணையாறான யமுனையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கை, யமுனை ஆறுகள் ஒன்றுசேரும் பிரயாக்ராஜ் நகரில் கரைமீறி வெள்ளம் பாய்கிறது. கரையோரப் பகுதிக்குள் வெள்ளம் பாய்வதால் படகின் உதவியுடன் மக்கள் ஓரிடத்தில் இருந்து வேறிடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
சரயு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அயோத்தியையும் கோண்டா நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் வழக்கமாக இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள், தங்கள் வாகனங்களைப் படகில் ஏற்றி மறுபுறத்துக்குக் கொண்டுசென்றனர்.
வாரணாசியில் கங்கையாற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் கரையோரத்தில் உள்ள படித்துறைகளும் படகுத் துறைகளும் மூழ்கியுள்ளன. ஆற்றோரத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்தோர் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான வேறிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தவாறு மாநில அமைச்சர் சுதந்திர தேவ் சிங் பார்வையிட்டார்.
வெள்ளம் பாதித்த அமீர்ப்பூருக்கு நேரில் சென்ற அமைச்சர் சுதந்திர தேவ் சிங், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களைப் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு உணவு வழங்குவதற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

