
காவிரி மேலாண்மை ஆணையத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழந்து விட்டதாகத் தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாகத் திருத்தியதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்நிலையில் திருத்தம் கொண்டு வந்ததற்கான காரணம் குறித்துச் சட்டப்பேரவையில் நீர்வளத்துறை ஆதவ் அர்ஜுனா பேசினார். நீர்ப் பங்கீட்டுக்காகக் காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருவதாகவும், இந்நிலையில் குடிநீர்த் தேவைக்காக என்று சொல்லிப் புதிய அணையைக் கட்டக் கர்நாடக அரசு முயல்வதாகவும் கூறினார். மேகேதாட்டில் குடிநீருக்காகப் புதிய அணையைக் கட்டினால் சட்டச் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கான திட்ட அறிக்கையைக் கொடுக்கச் சொல்லிக் கர்நாடக அரசுக்கு ஆதரவாகக் காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருவதாகவும், இதனால் அந்த ஆணையத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
சட்ட வல்லுநர்கள் கூறியபடியே புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோருவதாகவும், கர்நாடக அரசின் வியூகத்துக்கு எதிராகத் தமிழக அரசின் வியூகமே புதிய நடுவர் மன்றம் என்றும் கூறினார்.
தமிழக விவசாயிகளின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்தார்.




