
உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சூலப்புரத்தைச் சேர்ந்தவர் வாசியம்மாள் என்பவருக்கு சொந்தமான குன்னுவார்பட்டி அருகில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் பருத்தி எடுக்க தனது உறவினர்கள் மற்றும் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலர் என 15 க்கும் மேற்பட்டோர் பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாலையில் திடீரென மழை பெய்ததால் அருகே உள்ள புளியமரத்தின் அடியில் அவர்கள் ஒதுங்கிய போது, புளியமரத்தில் விழுந்த மின்னல் தாக்கி ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி என்ற மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், படுகாயம் அடைந்த வாசியம்மாள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த எழுமலை காவல்துறையினர் மின்னல் தாக்கி உயிரிழந்த ராமுத்தாய், தனிக்கொடி, கணபதியின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





