தமிழ்நாட்டு அரசியல் இதுவரை நாகரிகமான அரசியலாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அயன்ரெட்டியாபட்டிற்குச் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற வன்னியரசு வருகைத் தந்தபோது, ஊர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அவர் தான் பள்ளியில் பயின்ற ஆசிரியர் மறைந்த சங்கரவேலுவின் உருவச் சிலையினை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை கட்டுவது என்பது மற்றொரு தேசிய இனத்திற்கு எதிராக செயல்பட கூடாது என்று தான் பார்க்க வேண்டும். மத்திய அரசு இதைத் தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என தாங்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தவெகவில் இணைவதால் குதிரை பேர ஆட்சி நடக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், அப்படி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை என்று கூறினார். மேலும், தமிழ்நாட்டு அரசியல் இதுவரை நாகரிகமான அரசியலாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

