பெரம்பூர் தொகுதிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்!

சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு சுமார் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், அவர் இன்று முதன்முறையாக பெரம்பூர் தொகுதிக்கு வருகை தந்து, அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, தொகுதி வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.

வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். அலுவலக வளாகத்திற்குள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அருகில் உள்ள சர்மா நகர் 10-வது தெருவில் அமைந்துள்ள நியாய விலைக் கடையைப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள பயனாளிகளுக்குப் புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்வுகளின்போது அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

பெரம்பூர் தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை நாள்தோறும் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்காகவே பிரத்யேகமாக 10 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த அலுவலகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, முதலமைச்சருக்கெனத் தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதி மக்களின் குறைகளை நேரடியும், எளிதாகவும் தெரிவிக்க வழிவகை செய்யும் வகையில், ‘மக்கள் சேவை தளம்’ என்ற புதிய செல்போன் செயலியையும் முதலமைச்சர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். எந்த நேரத்திலும் இச்செயலி மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம். தேர்தல் வெற்றிக்குப் பின் தொகுதிக்கு வந்த முதலமைச்சருக்கு, த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *