மோந்தா புயல் தாக்கியதில் பல்லாயிரம் எக்டேர் பரப்பில் பயிர்கள் சேதம்..!

ஆந்திர மாநிலத்தில் மோந்தா புயல் தாக்கியதில் பல்லாயிரம் எக்டேர் பரப்பில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. புயலில் சாய்ந்த மரங்களை அகற்றி, மின்கம்பங்களைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்துக்கும் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே மோந்தா புயல் நேற்றிரவு கரையைக் கடந்தது. மணிக்கு 110 கிலோமீட்டர் சூறைக் காற்று வீசியதுடன் பலத்த மழை பெய்தது.

புயலின் தாக்கத்தால் கோணசீமா மாவட்டத்தில் பல்லாயிரம் எக்டேர் பரப்பில் குலைதள்ளிய வாழைகள் முறிந்தும் சாய்ந்தும் சேதமடைந்துள்ளன.

புயலுக்குப் பின் அமைதி நிலவும் சூழலில் கோணசீமா மாவட்டம் அமலாபுரத்தில் மீன்பிடி படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

அமலாபுரத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்ததால் மின்கம்பங்களும் கம்பிகளும் சேதமடைந்துள்ளன. இதனால் பல ஊர்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்த மின்கம்பங்களுக்குப் பதில் புதிய மின்கம்பங்கள் நாட்டுதல், மின்கம்பிகளை இழுத்துக் கட்டுதல் ஆகிய பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புயலின் தாக்கத்தால் குண்டூரில் மரங்களும் மின்கம்பங்களும் சாலையில் சாய்ந்து விழுந்தன. சாலைகளின் குறுக்கே கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கடற்கரையில் புயலின்போது பேரலைகள் எழுந்த நிலையில், புயல் கரையைக் கடந்து விட்டதால் இன்று காலை அலைகளின் சீற்றம் தணிந்துள்ளது.

இருப்பினும் இன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் அனுமதித்த பிறகே மீன்பிடிக்கச் செல்ல முடியும் என்று மீன்வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *