
உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண, இந்தியா அனைத்து பங்களிப்பையும் செய்ய தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அதன்படி, ரஷிய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷிசுனக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி-அல்பனீஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த, ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எனது 75-வது பிறந்தநாளுக்கு, தொலைபேசியில் அழைத்து அன்பான வாழ்த்து கூறிய எனது நண்பர் அதிபர் புதினுக்கு நன்றி என்றும், நமது சிறப்பு வாய்ந்த மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த, நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.



