
தமிழகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு வெற்றிபெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்துள்ளது.
இந்த அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, மார்க்சிஸ்ட் கட்சியின் செல்லசுவாமி ஆகியோர் பேசினர். அப்போது அரசின் நம்பிக்கைத் தீர்மானத்தைத் தாங்கள் ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். பாமகவின் சௌமியா தங்கள் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதாக அறிவித்தார். பாஜக உறுப்பினர் போஜராஜனும் நடுநிலை வகிப்பதாகக் கூறினார்.
அதன்பின் பேசிய அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி, இப்போதுள்ள தவெக அரசு 34 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதாகவும், அப்படியானால் அரசுக்கு எதிராக 66 விழுக்காடு வாக்குகள் விழுந்துள்ளதாகவும் கூறினார். தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை தவெக அரசு தங்களுக்கு ஆதரவாக இழுக்கப் பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
அதன்பின் எஸ்.பி.வேலுமணிக்குப் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அதற்குப் பழனிச்சாமி பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் யாரைப் பேச அனுமதிப்பது என்பது பேரவைத் தலைவரின் அதிகாரம் என்றும், அதில் யாரும் குறுக்கிடக் கூடாது என்றும் எச்சரித்தார். இதையடுத்துப் பேசிய எஸ்.பி.வேலுமணி தாங்கள் தாங்கள் தவெக அரசை ஆதரித்து வாக்களிப்பதாகக் கூறினார்.
தேமுதிக உறுப்பினர் பிரேமலதா இந்த அரசு எதிர்க்கட்சியினரின் ஆதரவைப் பெறக் குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டியதுடன் தான் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்புச் செய்வதாக அறிவித்தார்.
அரசின் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முந்தைய அரசின் மக்கள்நலத் திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தங்கள் கட்சியினர் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இறுதியாகத் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தங்கள் அரசு குதிரை வேகத்தில் செயல்படும் என்றும் குதிரைப் பேரத்தில் ஈடுபடாது என்றும் கூறினார். முந்தைய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
அதன்பின் பகுதிவாரியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அவையில் இருந்த மொத்தம் 171 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இதில் 144 உறுப்பினர்கள் நம்பிக்கைத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். 22 பேர் எதிர்த்தனர். 5 பேர் நடுநிலை வகித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தவெக அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் நன்றி தெரிவித்தார்.
அதன்பின் அவைவை மறுதேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரன் ஒத்திவைத்தார்.




