Stormy Daniels: நடிகைக்குப் பணம் தந்தது ஏன்? டிரம்ப் வழக்கறிஞர் விளக்கம்!

Advertisements

வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்குப் போலியாகக் கணக்கு காட்டிய பணத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தந்ததாக நடந்து வரும் வழக்கில், தன் குடும்பத்தையும், நற்பெயரையும் காக்க டிரம்ப் இவ்வாறு செய்ததாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், 77, 2016ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கும் ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற ஆபாச பட நடிகைக்கும் இடையேயான உறவுகுறித்து கிசுகிசுக்கப்பட்டது.

இந்த விவகாரம் அதிபர் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது எனக் கருதிய டிரம்ப், தன் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் வாயிலாக நடிகை ஸ்டார்மிக்கு ஒரு கோடி ரூபாய் தந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பணத்தை சட்ட ஆலோசனைக்கான கட்டணம் எனக் கணக்கு காட்டி தந்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் மீது பல்வேறு மாகாணங்களில் நான்கு கிரிமனல் வழக்குகளும், 34 மோசடி வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. தற்போது மீண்டும் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேளையில், இவ்வழக்கின் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

லோவர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு விசாரணையில், டிரம்ப், அவரது சட்ட ஆலோசகர் கோஹன் மற்றும் நேஷனல் என்கொயரர் பத்திரிகையின் பதிப்பாளர் டேவிட் பெக்கர் ஆகியோர், எதிர்மறை செய்தியை மறைக்க எவ்வாறு சதி செய்தனர் என்றும், அதற்கான திட்டம் 2015ல் டிரம்ப் டவரில் நடந்ததாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். இது முற்றிலும் தேர்தல் திசைதிருப்பும் முயற்சி எனவும் கூறினார்.

இதுகுறித்து டிரம்ப் தரப்பு வழக்கறிஞர் டோட் பிளாஞ்ச் கூறியதாவது:

டிரம்ப் தன்னுடன் 2006ல் நெருக்கமாக இருந்ததை வெளியில் சொல்வதாக ஸ்டார்மி டேனியல்ஸ் அவரை மிரட்டினார். இது மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சி.

இந்நிலையில் தான் டிரம்ப் தன் குடும்பம், தொழில் மற்றும் நற்பெயரை காப்பாற்ற, ஸ்டார்மி டேனியல்ஸ் பேசாமல் இருப்பதற்கு பணம் தந்தார்.

அதே போல் அரசு தரப்பு சாட்சியாக உள்ள டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் கோஹன், பொய் சாட்சியம் மற்றும் பிற குற்றங்களுக்காகச் சிறைக்குச் சென்றவர்.இவ்வாறு அவர் வாதாடினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *