
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி அரசில் புதிய அமைச்சர்களாக முஸ்லீம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகானும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசும் பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுத் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அந்தக் கட்சி காங்கிரஸ், முஸ்லிம் லீக், இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் மே பத்தாம் நாள் ஆட்சி அமைத்தது. இந்த அரசின் முதலமைச்சராகத் தவெக தலைவர் ஜோசப் விஜயும், அமைச்சர்களாக ஒன்பது பேரும் பதவியேற்றுக்கொண்டனர்.
அதன்பிறகு நேற்றுத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 21 பேரும், காங்கிரசைச் சேர்ந்த இருவரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவியேற்பு உறுதிமொழியும், இரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். இத்துடன் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜயுடன் சேர்ந்து மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.





