மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத்தேர்தல்!

மகாராஷ்டிரத்திலும் தமிழ்நாட்டிலும் காலியாக உள்ள ஒவ்வொரு மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 18ஆம் நாள் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த சுனேத்ரா பவார், தனது கணவர் அஜித் பவார் விமான விபத்தில் இறந்தபின் மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து அவர் ஏற்கெனவே இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து இம்மாதத் தொடக்கத்தில் விலகினார்.

இதேபோல் தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவின் சி.வி.சண்முகம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து மே ஏழாம் நாள் அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

இந்த இரண்டு இடங்கள் காலியாக உள்ளதால் அவற்றுக்கான தேர்தல் ஜூன் 18ஆம் நாள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் முதல் நாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசிநாள் ஜூன் 8 ஆகும். வேட்பு மனுக்களின் பரிசீலனை ஜூன் ஒன்பதாம் நாள் நடைபெறும்.

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் ஜூன் 11ஆம் நாளாகும். போட்டி இருந்தால் ஜூன் 18ஆம் நாள் முற்பகல் 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *