“தவெக ஆட்சி இப்போதைக்கு ஆபத்தில் இல்லை… ஆனா இந்த ஆட்சி 5 வருஷம் முழுசா நீடிக்குமா?ன்னு தெரியல” — இப்படின்னு சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சொல்லியிருக்காரு. அதுமட்டுமில்லாம, தவெகவுக்கு அன்றைய அரசியல் தேவைக்காகத்தான் ஆதரவு கொடுத்தோம்…
அதுக்காக எப்போதும் ஆதரவு கொடுப்போம்னு அர்த்தம் கிடையாதுன்னும் தெளிவுபடுத்தியிருக்காரு. அப்படின்னா, எதற்காக இப்படி ஒரு கருத்தை பாலகிருஷ்ணன் சொல்லியிருக்காரு? தவெக ஆட்சிக்கு உண்மையிலேயே என்ன சிக்கல் இருக்கு? அடுத்து இடதுசாரிகள் என்ன முடிவு எடுக்கப் போறாங்க? விரிவாக பார்க்கலாம்…!
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன், “தலைமை தேர்தல் ஆணையர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன” என தெரிவித்தார்.
தொடர்ந்து, “பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என தமிழக முதல்வர் கூறுகிறார். கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தால் மட்டும் போதுமா? ஞானேஷ்குமாரை கண்டித்து இதுவரை ஒரு வார்த்தைகூட தமிழக முதல்வர் விஜய் பேசவில்லை என குற்றம் சாட்டுகிறார். தொடர்ந்து, கொள்கை எதிரி என்று எழுத்தில் மட்டும் பதிவு செய்துவிட்டால் போதுமா?” என கேள்வி எழுப்பினார். மேலும், ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை நாளை முதல் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதனால் தேர்தல் ஆணையர் விவகாரம் மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தவெகவிற்கு அன்றைய தேவையின் அடிப்படையில்தான் ஆதரவு அளிக்கப்பட்டது. அதற்காக எப்போதும் ஆதரவு வழங்கப்படும் என்று அர்த்தமில்லை. மீண்டும் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு வந்தால், அப்போது ஆதரவு அளிப்பது குறித்து யோசிக்கப்படும்” என தெரிவித்தார். மேலும், “தவெகவுடன் ஏற்கனவே ஒரு கூட்டணி உள்ளது. புதிதாக பாமக இணைந்தால் விசிகவின் நிலை என்ன? விசிகவையும் பாமகவையும் ஒரே கூட்டணியில் வைத்துக்கொள்ள தமிழக வெற்றி கழகத்தால் முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
அதேநேரத்தில், “தற்போதைய சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி உடனடியாக கவிழ்ந்துவிடும் என்ற நிலை இல்லை. ஆனால் இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்குமா என்பது தெரியவில்லை. தற்போதைக்கு ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார். தவெக கூட்டணியில் பாமக இணைவது குறித்த கேள்வி, விசிகவின் நிலைப்பாடு, மேலும் ஆட்சியின் எதிர்காலம் என அடுத்தடுத்து எழுந்துள்ள இந்த கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. ஏற்கனவே திமுக, தவெக, அதிமுக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், தற்போது கம்யூனிஸ்ட்களும் களத்தில் இறங்கியுள்ளதால் தேர்தல் களம் 5 முனைப் போட்டியாக மாறியுள்ளது. வெளியில் இருந்து தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள்,
தற்போது இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. ஆட்சிக்கு எதிரான தங்களது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் அரசின் முடிவுகளை விமர்சித்து வந்த நிலையில், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவு தவெக அரசுக்கு புதிய அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஆதரவு கொடுத்த கட்சிகளே தேர்தல் களத்தில் எதிராக நிற்கிறதா? இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்களின் தனிப்போட்டி தவெக அரசுக்கு எந்த அளவுக்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்விகள் தற்போது அரசியல் களத்தில் எழுந்துள்ளன. இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் தொடர்ந்து முதல்வர் விஜயை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் கம்யூனிஸ்ட் தலைவர்கள், தற்போது “ஆட்சி நீடிக்குமா?” என்ற கேள்வியை எழுப்பும் வகையில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், தவெக ஆட்சி தற்போது உடனடியாக கவிழும் நிலை இல்லை என்றாலும், ஐந்து ஆண்டுகள் நீடிக்குமா என்பது தெரியாது என தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் இடைத்தேர்தலில் நேரடியாக களம் காணும் கம்யூனிஸ்ட்கள்… மறுபுறம் ஆட்சியின் எதிர்காலம் குறித்து எழுப்பப்படும் கேள்விகள்… தவெக அரசுக்கு எதிரான கம்யூனிஸ்ட்களின் அரசியல் நிலைப்பாடு அடுத்த கட்டத்திற்கு நகர்கிறதா? என்ற விவாதம் தமிழக அரசியலில் எழுந்துள்ளது.

