அரசியலில் அடுத்த திருப்பம்.. காங்கிரஸை ஓரங்கட்டிய திமுக..!

நீண்ட காலமாக நீடித்த திமுக – காங்கிரஸ் உறவு இனி தொடர வாய்ப்பில்லை என திமுக தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. முடிந்தது முடிந்ததுதான்… இனி சமரசத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை” என்பதே திமுகவின் கறாரான நிலைப்பாடாம். பாஜக எதிர்ப்பு மற்றும் ஜனநாயகப் போராட்டங்களில் மட்டும் காங்கிரஸுக்கு ஆதரவு தரலாம்…

ஆனால் தேர்தல் அரசியலில் இனி கூட்டணி இல்லை என திமுக தெளிவுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் திமுக ஏன் இந்த முடிவை எடுத்தது? அடுத்து என்ன நடக்கப்போகிறது? விரிவாகப் பார்க்கலாம்…

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கைகோர்த்ததிலிருந்தே, திமுக–காங்கிரஸ் உறவில் விரிசல் தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது. தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுகவின் ஆதரவு காங்கிரசுக்கு முக்கியம் என்பதால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து சமரச முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்.

ஆனால், இந்த சமரச முயற்சிகளுக்கு திமுக தரப்பில் திட்டவட்டமான பதிலடி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலம் முடிந்துவிட்டது… இனி காங்கிரசுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் தவெகவுடன் சென்றுவிட்டு, டெல்லியில் மட்டும் எங்களிடம் ஆதரவு கேட்பதை ஏற்க முடியாது என திமுக மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல். இதனால், திமுக–காங்கிரஸ் இடையேயான அரசியல் உறவில் மீண்டும் சமரசத்திற்கு வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தேசிய அளவில் வேறு ஒரு கட்சியுடன் உறவைத் தொடர நினைத்தால், அதை திமுக ஏற்றுக்கொள்ளாது என்கிற நிலைப்பாடு தற்போது வெளிப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி வேறு…
கொள்கை ரீதியான பிரச்சனைகள் வேறு… என்று திமுக தனது எல்லையை தெளிவாக வரையறுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பாஜகவுக்கு எதிரான பொதுப் பிரச்சனைகள் வந்தால் மட்டும், கூட்டணி இல்லாவிட்டாலும் இணைந்து போராடுவதற்கு ஆதரவு இருக்கலாம்.

அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் முறை, மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சித் தத்துவம் தொடர்பாக பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் போராட்டங்களில் இந்த ஆதரவு தொடரும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் ஒரு கட்சியுடன் கூட்டணி… தேசிய அளவில் இன்னொரு கட்சியுடன் உறவு… என அரசியல் லாபத்துக்காக இரண்டு பக்கமும் செல்லும் அணுகுமுறையை மட்டும் திமுக ஏற்காது என்பதுதான் இந்த விவகாரத்தின் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

“பாஜகவை எதிர்ப்பதில் எங்களுக்கும் காங்கிரஸுக்கும் கொள்கை ரீதியாக ஒற்றுமை இருக்கு. அதனால் மக்கள் பிரச்சனைக்காகவும், ஜனநாயகப் போராட்டங்களுக்காகவும் காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களுக்கு வெளியிலிருந்து கள ஆதரவு கொடுக்கலாம்.
ஆனா தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, ‘இந்தியா’ கூட்டணியின் அதிகாரப்பூர்வ கூட்டங்களில் பங்கேற்பது என எதற்கும் வாய்ப்பு இல்லை” என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என கூறப்படுகிறது. திமுக எடுத்துள்ள இந்த கறாரான முடிவு, டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தவெகவுடன் காங்கிரஸ் உறவு வைத்துக்கொண்ட நிலையில், தற்போது திமுகவின் அரசியல் ஆதரவை இழக்கும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி இல்லாமல், போராட்டங்களுக்கு மட்டும் ஆதரவு என்ற நிலை உருவானால், அது ராகுல் காந்தியின் அடுத்தகட்ட நாடாளுமன்ற வியூகத்துக்கும், பிரதமர் பதவியை நோக்கிய அவரது அரசியல் பயணத்துக்கும் பின்னடைவாக அமையலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இதற்கெல்லாம் மேலாக, காங்கிரஸுடனான கூட்டணி கதவு நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இனி மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து, காங்கிரஸுக்கு மாற்றான ஒரு அரசியல் சக்தியை உருவாக்குவதுதான் திமுகவின் அடுத்தகட்ட திட்டமா? என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *