அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்? – மரகதம் குமரவேல் விளக்கம்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டார். மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

 

சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மதுராந்தகம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கிருந்து பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் செல்லும் வழியில் சாலை வழியாகச் சென்று, ஆத்தூர் அருகே திறந்தவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கூட்ட அரங்குக்கு வந்தடைந்தார்.

 

இதையடுத்து பிரசார வாகனத்துக்கு வந்த முதலமைச்சர் விஜய், தொண்டர்களுடன் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடினார். தொடர்ந்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் பேசினார். அப்போது, தான் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்ததற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்த மரகதம் குமரவேல், “திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால், எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தேன்” என்று தெரிவித்தார்.

 

மேலும், தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், தான் பிரசாரம் செய்யும் பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக தரப்பினர் தன்னை விமர்சித்து வருவதாகவும் அவர் கூறினார். அதிமுகவில் இருந்து வெளியேறியபோது மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அந்த நேரத்தில் முதலமைச்சர் விஜய் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் மரகதம் குமரவேல் தெரிவித்தார். “நான் மேலே ஏறும் போது எனக்கு கை கொடுத்து, ‘நான் இருக்கிறேன்’ என்று சொன்னவர் முதலமைச்சர் விஜய்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

தொடர்ந்து, மதுராந்தகம் தொகுதி மக்களின் நலன் மற்றும் தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே தவெகவில் இணைந்ததாக தெரிவித்த அவர், தொகுதி மக்களுக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் கூறினார். மேலும், தவெக ஊழலற்ற ஆட்சியை வலியுறுத்தும் நிலையில், தன்னைப் பற்றி முன்வைக்கப்படும் சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய மரகதம் குமரவேல், “கொள்கையில் உறுதியாக இருக்கும் விஜய் எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார்? நான் ஏன் பெட்டி வாங்கப் போகிறேன்?” என்று கேள்வி எழுப்பினார்.

 

இறுதியாக, முதலமைச்சர் விஜயிடம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, மதுராந்தகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து தர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். “என்னை பார்த்துக் கொள்வீர்களோ இல்லையோ, மதுராந்தகம் தொகுதி மக்களைப் பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா. அவர்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் செய்து கொடுக்க வேண்டும்” என்று மரகதம் குமரவேல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *