
குப்பை இல்லாத குற்றாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று குற்றாலத்தில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஸ்குமார் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவரை தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து கீழப்பாவூர் யூனியன் பகுதியில் அமைந்துள்ள பெரியகுளத்தில், படகுகுழாம் அமைப்பது குறித்து நேரடியாக பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர், சுற்றுலாத்தலமான குற்றாலம் ஐந்தருவி பகுதிக்கு சென்ற அமைச்சர் ராஜேஷ்குமார், அங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டப்பட்டு வரும் கழிப்பிடக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஆய்வைத் தொடர்ந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சுற்றுலா ஸ்தலமான குற்றாலம் அருவி பகுதியில், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாகவும், நெருக்கடியாகவும் இருக்கும் கடைகள் அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், குப்பை இல்லாத குற்றாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.



