தமிழ்நாட்டில் சீர்கெடும் சட்டம் ஒழுங்கு – தவெக ஆட்சியைச் கடுமையாக விமர்சித்த கனிமொழி!

தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால்  சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.
இப்போது தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்? என்று வினவியுள்ளார். மேலும் முதலமைச்சர் விஜய், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? என்றும் வினவியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *