கேரளத்துக்கு ஆயுர்வேத மருத்துவம் பெற வந்த கென்ய நாட்டின் முன்னாள் பிரதமர் ராய்லா ஒடிங்கா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவருக்குக் கேரள அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
கென்யாவில் 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் ராய்லா ஒடிங்கா. 80 வயதான இவர் கேரளத்தில் ஆயுர்வேதச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார்.
அவர் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். அதில் உயர்ந்த அரசியல்வாதியான அவர் இந்தியாவின் சிறந்த நண்பராக விளங்கினார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கொச்சியில் அவர் உடலுக்குக் கேரள அரசு சார்பில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது ஒடிங்காவின் மகள்கள் வின்னி, ரூத் ஆகியோர் உடனிருந்தனர்.



