தைவான் விவகாரத்தை அமெரிக்கா மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நடைபெற்ற அரசு விருந்தில் இருவரும் கலந்துகொண்டு, அமெரிக்கா – சீனா இடையேயான உறவைப் பாராட்டித் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவும் சீனாவும் இதுவரை இல்லாத அளவுக்குச் சிறப்பாக இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதுவே இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பரஸ்பர மரியாதைக்கு அடித்தளமாக உள்ளதாகக் கூறினார். எதிர்காலத் தலைமுறைகளின் வளம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த உறவை தொடர்ந்து கட்டியெழுப்ப முடியும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய சி ஜின்பிங், அமெரிக்கா-சீனா உறவுகள் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார். அதிபர் டிரம்பும் நானும் நேர்மையான மற்றும் ஆழமான பேச்சுவார்த்தையை நடத்தியதாகக் கூறினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆக்கப்பூர்வமான மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட உறவுக்குப் புதிய அம்சங்களை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தார். தைவான் விவகாரத்தை அமெரிக்கா மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.




