மரகத நாணயம்-2 – வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழ் சினிமாவில் பேண்டஸி மற்றும் நகைச்சுவைக் கலந்த வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘மரகத நாணயம்-2’ உருவாகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது, இது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
முதல் பாகத்தைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம், இம்முறை ஆக்சஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்த இரண்டாம் பாகத்திலும் முன்னணி கதாநாயகனாக ஆதியும், அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியும் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் புதிய வரவாக பிரியா பவானி சங்கர் மற்றும் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் களமிறங்குகின்றனர். மேலும், இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக படக்குழு சார்பில் படப்பிடிப்பு தள வீடியோ வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் எனப்படும் அடுத்தகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் வரும் 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகம் ஏற்படுத்திய அதே மர்மம், நகைச்சுவை மற்றும் பேண்டஸி ரகளையை இந்த இரண்டாம் பாகமும் தந்து ரசிகர்களைக் கவருமா என்ற எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *