மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நடைபெறுகிற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதுதொடர்பாக தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார். காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள், வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார். QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.


