
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில், சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக தவெக நிர்வாகிகள் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர்ர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் தலைமையிலான தவெக கட்சி தங்களுடைய அரசியல் வேலைகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு மக்களை நேரில் சென்று பொதுக் கூட்டம் நடத்தி சந்திக்காமல் இருந்த விஜய் டிசம்பர் 18 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தி மக்களை சந்தித்தார்.
சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அடுத்தகட்ட தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், ஈரோட்டில் மக்கள் சந்திப்பை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து, விஜய்க்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளார் செங்கோட்டையன். இந்த நிலையில், தவெக உயர்மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில், கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு ஒன்றை தவெக அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

