தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால், 25 பெண் ஊழியர்கள் மயங்கி விழுந்தனர்.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில், புதூர் பாண்டியாபுரம் அருகே தனியார் மீன் பதப்படுத்தும் ஆலை இயங்கி வருகிறது. இதில் கடலில் பிடித்து வரக்கூடிய மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பணி நடைபெற்று வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவில் மின்சார கசிவு காரணமாக, அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த தீ விபத்து காரணமாக மீன்களை குளிரூட்டுவதற்கு பயண்படுத்தக்கூடிய வாயு குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இரவு பணியில் இருந்த 25 பெண்கள் மயக்கமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
