தூய சக்தி, தமிழகத்தைப் போதையில் புதையும் சக்தியாக மாற்றி வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தருமபுரியில் செலவுக்குப் பணம் தர மறுத்ததால், கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். பெற்ற தாயின் உயிரையே பறிக்கும் அளவிற்கு போதை வெறி தலைக்கேறியிருப்பது, தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் அரசு எந்த அளவிற்கு தோல்வியடைந்திருக்கிறது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் தடுப்புப் படை அமைப்பதற்குத் தனது முதல் மூன்று கையெழுத்துகளில் ஒன்றாகக் கையெழுத்திட்டதாகப் பெருமை பேசிக்கொண்ட தூய சக்தி, இன்று கஞ்சா போதையால் நிகழ்ந்திருக்கும் இந்தப் படுகொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறது ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, பல கோடி ரூபாய் செலவு செய்து ரீல்ஸ் கண்டெண்டுகளுக்காக மாரத்தான் ஓடுவதால் மட்டும் போதைப் பொருட்களை ஒழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து, உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



