ஓமன் அருகே 27 இந்திய மாலுமிகளுடன் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில், தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானும் அதற்குப் பதிலடி கொடுத்தது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. அதேவேளை, அனுமதியின்றி ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் பரவியது.
இந்நிலையில், துபாய்க்குச் சொந்தமான எம்டி லூயிஸ் 1 என்ற கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்தது. அந்த கச்சா எண்ணெய் கப்பலில் 27 இந்திய மாலுமிகள் பயணித்தனர். ஹார்முஸ் ஜலசந்தியில் ஓமன் நாட்டின் கஷாப் பகுதியிலிருந்து 25 நாட்டிகல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியது. இந்த கண்ணிவெடி தாக்குதலில் கப்பலின் எஞ்சின் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் அறையில் பற்றிய தீயை மாலுமிகள் உடனடியாக அணைத்தனர். அதேவேளை, கச்சா எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 27 பேரும் ஓமன் கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


