
சென்னை:
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோர் இன்று சென்னைக்கு வருகை தரவுள்ளதால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கவுள்ளது.
திருமண விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இன்று (ஜனவரி 31) சென்னை வரவுள்ளாா். இந்தத் திருமண நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரும் பங்கேற்கவுள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து மாலையில் அமித்ஷா புறப்படுகிறார். இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
பின்னர், சாலை மார்க்கமாகத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்திற்கு செல்லவுள்ளார். அதன் பின்னர் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, டெல்லி செல்லவுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரும் மாலை 4.55 மணியளவில் சென்னை வருகிறார். பின்னர், காதுக் கண் கேளாதோர் முட்டுக்காட்டில் உள்ள தேசிய நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு கருத்தரங்கில் பங்கேற்கிறார்.
பின்னர், வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். மீண்டும் இரவு சென்னை விமான நிலையம் வந்து டெல்லி புறப்படவுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் வருகையையொட்டி சென்னையில் பல்வேறு இடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாலை 4 மணி முதல் இரவு 11.30 மணிவரை போக்குவரத்து போலீசார் மாற்றம் செய்துள்ளனர். அதில் சோழிங்கநல்லூரிலிருந்து அக்கரைக்கு வரும் வாகனங்கள் சோழிங்கநல்லூர் சந்திப்பில் ஓஎம்ஆர் சாலை வழியாகத் திருப்பி விடப்படும்.
மகாபலிபுரத்திலிருந்து ஈசிஆர் வழியாக வரும் வாகனங்கள், கோவளம் சந்திப்பிலிருந்து திருப்பி விடப்பட்டு கேளம்பாக்கம் வழியாக மாற்றி விடப்படும். திருப்போரூரிலிருந்து ஓஎம்ஆர் வரும் வாகனங்கள், கேளம்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படும்.
விமான நிலையத்திற்கு செல்லவிருக்கும் வாகனங்கள், ஓஎம்ஆர் மற்றும் வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, ஜிஎஸ்டி சாலை ஆகியவற்றை பயன்படுத்தி செல்லலாம்.
தாம்பரம் மாநகர எல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கனரக வாகனங்களும் ஓஎம்ஆர், ஈசிஆர் மற்றும் 200 அடி ரேடியல் சாலையில் மதியம் 2 மணி முதல் இரவு 11.30 மணிவரை நுழைவது கட்டுப்படுத்தப்படும்.
வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய ஓஎம்ஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலையைப் பயன்படுத்தி அவர்கள் செல்லும் இடங்களுக்குச் செல்லலாம்.
விமான நிலையத்துக்குச் செல்லும் வாகனங்கள், கேளம்பாக்கம், வண்டலூா், ஜிஎஸ்டி சாலை வழியாகச் செல்லலாம். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ரேடியல் சாலை ஆகிய சாலைகளில் மாலை 4 மணி முதல் இரவு 11.30 வரை, கனரக வாகனங்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் கிழக்கு கடற்கரையைப் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக ராஜீவ் காந்தி சாலையைப் பயன்படுத்தலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்புக் கருதி குடியரசு துணைத் தலைவா் வாகனம் செல்லும் பகுதி, விமான நிலையம், ஆளுநா் மாளிகை ஆகிய பகுதிகளில் டிரோன்கள் பறக்கச் சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது.
