
நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று நாடு முழுவதும் சரஸ்வதிப் பூஜை, ஆயுதப் பூஜை ஆகியன செய்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டி பொதுமக்கள் வரிசையில் நின்று வழிபட்டுச் செல்கின்றனர்.
தில்லியில் அமைத்துள்ள துர்க்கா பூஜைப் பந்தலில் பக்தர்கள் ஆடிப்பாடிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பாஜக தேசியச் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரியும் பங்கேற்றார்.
ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலில் மகா நவமியையொட்டி நடைபெற்ற சிறப்புப் பூசையில் ஏராளமானோர் பங்கேற்று வரிசையில் நின்று வழிபட்டுச் சென்றனர்.
தில்லி அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரேகா குப்தா கலந்துகொண்டு மாணவியருக்குக் கன்யாபூசை செய்தார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள சங்கரி தேவி கோவிலில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று வழிபட்டனர்.
உத்தரக்கண்ட் மாநிலம் அரித்துவாரில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலில் மகா நவமியையொட்டிச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டனர்.
உத்தரப் பிரதேசம் கோரக்பூரில் உள்ள கோரகநாதர் கோவிலில் மகாநவமியையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு சிறுமியருக்குக் கன்யாபூசை செய்தார்.





