அதிகனமழையால் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு.!

அதிகனமழையால் கேரள மாநிலம் வயநாடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதில், மண்ணுக்குள் புதைந்த 4-பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் வயநாடு அடுத்த மேப்பாடி பகுதியில், 22 புள்ளி 6 சென்டிமீட்டர் அளவிற்கு கனமழை பெய்த நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேப்பாடி அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுவரை மண்ணுக்குள் புதைந்த 6 பேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

மண் சரிவில் புதைந்து 4-பேர் உயிரிழந்தனர். மேலும் சில தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாக கூறப்படும்நிலையில், மீட்புப்பணியில் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர்கள் தங்கியிருந்த அறையில் சுமார் 15 பேர் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் வைக்கோல் கூரையிட்ட கடை ஒன்றை நடத்தி வந்த குடும்பத்தினரும் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

6 தொழிலாளர்கள் மேப்பாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால், அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேறினர். சுரங்க பணிக்காகத் தோண்டப்பட்ட மண் சரிந்து குவிந்ததில், ஒரு வீடும், தேவாலயமும் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. அப்பகுதியில் இருந்த பேருந்து நிறுத்தமும், பாலமும் மண்ணுக்குள் புதைந்துவிட்டன. இந்நிலையில், நிலச்சரிவைத் தொடர்ந்து, வயநாட்டிற்கு நேரில் செல்லுமாறு அமைச்சர்களுக்கு, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது நிலச்சரிவு ஏற்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *