
திருவள்ளூர் பொன்னேரி அருகே அனல் மின் நிலையக் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஒன்பது பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் 10 இலட்ச ரூபாயும், பிரதமர் மோடி 2 இலட்ச ரூபாயும் நிதியுதவி அறிவித்துள்ளனர்.
பொன்னேரி அருகே வாயலூரில் எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல மிக உய்ய அனல்மின் திட்டக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொன்றும் 660 மெகாவாட் திறனுள்ள 2 அலகுகள் கட்டும் பணிகள் முக்கால்வாசி முடிவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மூவாயிரத்துக்கு மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் இங்குத் தங்கிப் பணியாற்றி வருகின்றனர்.
நிலக்கரி கையாளும் கிடங்குப் பிரிவில் வட மாநிலத் தொழிலாளர்கள் மிகப்பெரிய வளைவு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். செவ்வாய் மாலை சுமார் 150 அடி உயரத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பத்துப் பேர் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது வளைவுகள் அமைக்கப் பொருத்தப்பட்ட இரும்புக் கம்பிகள் சரிந்து தொழிலாளர்கள் கீழே விழுந்து இரும்பு கம்பிகள் தொழிலாளர்கள் மீது விழுந்தன.
இந்த விபத்தில் தலை, உடலில் பலத்த காயமடைந்து தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களைச் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் 9 தொழிலாளர்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் ஒருவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 10 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தோரின் உடல்களை அவர்களின் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதே போலப் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 இலட்ச ரூபாய் வழங்கப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விபத்து நேர்ந்த இடத்தில் தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.



