Tnrain:காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்திற்கு கிழக்கே 280 கிலோ மீட்டர், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 230 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை/இரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை பூரி (ஒடிசா) மற்றும் தீகா (மேற்கு வங்காளம்) இடையே கடக்க கூடும்.

இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அத்துடன் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

இதனால் சென்னையை அடுத்துள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பொதுவாக 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக்கூடிய வானிலை ஏற்பட்டுள்ளதாகவும், துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் அர்த்தம் என்று துறைமுக அதிகாரிகள் கூறினர்.

நாளை முதல் 14-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று முதல் 12-ந்தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *