Dog bites:இந்த ஆண்டில் இத்தனை உயிரிழப்பா? சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போட்!

Advertisements

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு ரேபிஸ் பாதித்து 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைத் தெருநாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில சம்பவங்களின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 6.42 லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ரேபிஸ் பாதித்து 34 பேர் உயிரிழந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமான பாதிப்புகளாகும்.

கொசு மற்றும் விலங்குகளால் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது, நாய்க்கடியால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் உயிரிழப்புகளே தமிழகத்தில் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.

மலேரியா, சிக்கன்குனியா உள்ளிட்ட பல்வேறு வியாதிகளினால் இந்த ஆண்டில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. அதேபோல, 16,081 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது போன்ற கொடிய நோய்களிலிருந்து பொதுமக்களின் உயிரிழப்புகள் தடுக்கப்பட்ட நிலையில், நாய் கடியால் 34 பேர் உயிரிழந்திருப்பது சுகாதாரத்துறைக்கு அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்.

இதுகுறித்து குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சக கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு கூறியதாவது: பொது சுகாதாரத்தில் அச்சுறுத்தலாக இருக்கும் ரேபிஸ் நோயைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள், மனிதர்களுக்குத் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறோம். ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம், எனக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *